உயிரைப் பறித்த ஒரு முத்தம்!

கடந்த வாரம்  மெக்சிகோ சிட்டியில் 17 வயது இளைஞரான ஜூலியோ மசியாஸ் கோன்சாலஸ், தனது காதலி கழுத்தில் வைத்த ‘லவ் பைட்’ (Hickey) காரணமாக உயிரிழந்தார்; அந்த அழுத்தமான முத்தத்தால் கழுத்தின் இரத்தக் குழாயில் உருவான ஒரு இரத்த உறைவு (Blood clot) மூளைக்குச் சென்று பக்கவாதத்தை (Stroke) ஏற்படுத்தியதே இந்த எதிர்பாராத மரணத்திற்கு காரணமாக அமைந்தது. ஓர் முத்த தழும்பானது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டு சென்றது என்பது குறித்து இப்பதிவு ஆராய்கின்றது

“முத்த தழும்பு”, “அன்பு கடி” அல்லது Love bite / Hickey என்பது பொதுவாக தோலில் உறிஞ்சுதல் (உறிஞ்சும் செயல் – suction) மூலம் ஏற்படும் மேலோட்டமான காயம் (மேல்தோல் இரத்தக் கசிவு – contusion / ecchymosis) ஆகும். இது பெரும்பாலும் பாதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. ஆனால், மிகவும் அரிதான சில சூழ்நிலைகளில், குறிப்பாக கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட இத்தகைய காயத்திற்குப் பின் திடீர் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் மருத்துவ மற்றும் சட்ட (தடயவியல்) ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன.

இத்தகைய வழக்குகளில், காரண–விளைவு தொடர்பு (causation), நேர ஒத்திசைவு (temporal relationship), மற்றும் உடற்கூறு ஆதாரங்கள் (pathological evidence) ஆகியவை மிக முக்கியமானவை.

கழுத்தின் உடற்கூறு முக்கியத்துவம் (Anatomical Importance of Neck)

கழுத்துப் பகுதி மிகவும் நுணுக்கமான அமைப்புகளை கொண்டுள்ளது:

  • கரோட்டிட் நாடி (Carotid artery) – மூளைக்கு இரத்தத்தை வழங்கும் முக்கிய நாடி
  • கரோட்டிட் சைனஸ் (Carotid sinus) – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணர்வுக் குழு (receptor)
  • வேகஸ் நரம்பு (Vagus nerve) – இதய துடிப்பு மற்றும் உடல் தன்னியக்க கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும்

எனவே, இப்பகுதியில் ஏற்பட்ட சிறிய காயங்களுக்குக் கூட சில நேரங்களில் கடுமையான விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஒவ்வொரு சாத்தியக்கூறுகளும் சாத்திய வரிசையில் கீழே பட்டியல் படுத்தப்படுகின்றது

1. கரோட்டிட் நாடி காயம் மற்றும் இரத்த உறைவு (Carotid Artery Injury and Thrombosis) – மிக அதிக சாத்தியம்

கழுத்தில் ஏற்பட்ட உறிஞ்சும் காயம் காரணமாக கரோட்டிட் நாடியின் உள் அடுக்கு (intima) சேதமடையலாம். இதன் விளைவாக குருதி சிறுதட்டுக்கள்  சேர்தல் (platelet aggregation) மற்றும் இரத்த உறைவு கட்டி உருவாக்கம் (thrombus formation) நடைபெறும். இவ்வாறு உருவான இரத்த உறைவு கட்டி அங்கேயே இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம் அல்லது மூளைக்குச் சென்று தடுப்பு ஏற்படுத்தலாம் (embolism)

இதனால்:

  • மூளை இரத்த ஓட்டக் குறைவு (ischemic stroke)
  • மூளை திசு அழிவு (cerebral infarction)
  • திடீர் மரணம்

என்பன ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

2. கரோட்டிட் நாடி அடுக்கு பிரிவு (Carotid Artery Dissection)

சில நேரங்களில் காயத்தால் நாடியின் சுவர் அடுக்குகள் பிரிந்து பொய்யான வாயில் (false lumen) உருவாகலாம். இதனால் இரத்த ஓட்ட குறைதல் மற்றும் இரத்த உறைவு கட்டிகள்  நகர்தல் (embolism) போன்றன நடைபெறும். இதன் விளைவாக பாரிசவாதம் அல்லது திடீர் மரணம் ஏற்படலாம்

3. கரோட்டிட் சைனஸ் தூண்டுதல் (Carotid Sinus Stimulation)

கரோட்டிட் நாடியின் பிரிவு பகுதியில் உள்ள கரோட்டிட் சைனஸ் என்பது இரத்த அழுத்த கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது. இப்பகுதி அதிகமாக தூண்டப்பட்டால்:

  • வேகஸ் நரம்பு செயல்பாடு அதிகரிக்கும்
  • இதய துடிப்பு குறையும் (bradycardia)
  • இதய நிறுத்தம் (asystole) / திடீர் மரணம் ஏற்படலாம்

இந்த நிலை Carotid Sinus Hypersensitivity (CSH) உள்ளவர்களில் அதிகமாகக் காணப்படும். ஆனால் சாதாரண love bite பெரும்பாலும் மேலோட்டமானது மற்றும் ஆழமான அழுத்தம் இல்லை

👉 எனவே இது சாத்தியமான காரணமாக இருந்தாலும், குறைந்த சாத்தியக்கூறுடையது.
👉 இந்த நிலை உடற்கூறு ஆதாரம் இல்லாததால், இது “மற்ற காரணங்கள் நீக்கப்பட்ட பின்” (diagnosis of exclusion) மட்டுமே கருதப்படுகிறது.

4. வேகல் தடுப்பு (Vagal Inhibition)

கழுத்தில் திடீர் தூண்டுதல் காரணமாக தன்னியக்க நரம்பியல் (parasympathetic) செயல்பாடு அதிகரித்து திடீர் இதய நிறுத்தம் ஏற்படலாம். இது உடனடி மயக்கம் மற்றும் வீழ்ச்சி மரணம் போன்றன இருக்கும் மேலும் உடற்கூறு ஆதாரம் இருக்காது

❗ ஆகையால் நிரூபிக்க மிகவும் கடினம் அத்துடன் மற்ற காரணங்கள் நீக்கப்பட்ட பின் மட்டுமே கருதப்பட வேண்டும்

அடிப்படை இயற்கை நோய்கள் (Underlying Natural Diseases)

சில நேரங்களில் மரணத்தின் உண்மையான காரணம்:

  • இதய மின்சார கோளாறுகள் (cardiac arrhythmias)
  • இதய தசை நோய் (cardiomyopathy)
  • மூளை aneurysm

இத்தகைய நிலைகளில்:
👉 “love bite” என்பது சம்பவ ஒற்றுமை (coincidence) மட்டுமே

⚠️ எனவே, தடயவியல் ஆய்வில்:

  • இயல்பான நோய்கள் முதலில் நீக்கப்பட வேண்டும்

கழுத்தில் ஏற்பட்ட “அன்பு கடி” காரணமாக திடீர் மரணம்
✔️ மிகவும் அரிதானது
✔️ ஆனால் மருத்துவ ரீதியாக சாத்தியம் உள்ளது

✔️ நாம் மிகுந்த காதல் உணர்ச்சி வசப்படும் பொழுது எம்மை அறியாமல் அதிக உறிச்சுதல் விசையினை பிரயோகிக்க முற்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறன துர்பாக்கிய நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் உள்ளது. எனவே உணர்ச்சி வசப்படும் பொழுது அவதானம் தேவை 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.