ஆட்டுக்கறி உயிரைக் காவுகொள்ளுமா?

சமீபத்தில், 28 வயதுடைய ஆரோக்கியமான இளைஞர் ஒருவர் இரவு ஆட்டுக்கறி (மட்டன்) சாப்பிட்ட சில மணி நேரங்களில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஆட்டுக்கறி சாப்பிட்டதால் சளி ஏற்பட்டு மூச்சுத் திணறி இறந்துவிட்டார்” என்று பொதுமக்களிடையே ஒரு தவறான கருத்து பரவி வருகிறது.ஆனால், அவரது பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கையில், அவர் மாரடைப்பால் (Heart Attack) தான் மரணமடைந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவயதில் இப்படி நடப்பது சாத்தியமா? ஆட்டுக்கறிக்கும் மாரடைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

1. ஆட்டுக்கறி சாப்பிட்டால் சளிபிடித்து மரணம் ஏற்படுமா?

நம்மூரில் ஒரு பொதுவான வதந்தி உண்டு; ஆட்டுக்கறி சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடித்தாலோ அல்லது இரவில் மட்டன் சாப்பிட்டாலோ அது “நெஞ்சுச் சளியாக” மாறி, மூச்சை அடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். இது முற்றிலும் அறிவியல் பூர்வமற்ற கருத்து. உணவு செரிமான மண்டலத்திற்குச் (Digestive System) செல்கிறது; சளி என்பது சுவாச மண்டலம் (Respiratory System) சார்ந்த விஷயம். எனவே, மட்டன் சாப்பிடுவதால் உடனடியாக சளி பிடித்து யாரும் இறப்பதில்லை.

2. அப்படியானால் அன்று இரவே மாரடைப்பு வரக் காரணம் என்ன?

இந்த மரணத்திற்கு ஆட்டுக்கறி மட்டுமே நேரடி காரணம் அல்ல. ஆனால், ஏற்கனவே உடலில் இருந்த சில மறைமுகப் பிரச்சினைகளை அந்த கனமான உணவு (Heavy Meal) தூண்டியிருக்கலாம்

  • அதிகப்படியான கொழுப்பும் இரத்த ஓட்டமும்: ஒரே நேரத்தில் அதிக கொழுப்பு மற்றும் மசாலா நிறைந்த உணவை (குறிப்பாக இரவு நேரத்தில்) அதிகமாகச் சாப்பிடும் போது, அதைச் செரிமானம் செய்ய நம் வயிற்றுப் பகுதிக்கு வழக்கத்தை விட அதிகமான இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது.
  • இதயத்திற்கு ஏற்படும் அழுத்தம்: செரிமானத்திற்காக இரத்தம் வயிற்றை நோக்கிப் பாயும்போது, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தற்காலிகமாகக் குறையலாம். இதனால் இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் (Blood Pressure) திடீரென அதிகரிக்கும்.
  • ஏற்கனவே இருந்த அடைப்பு (Silent Block): அந்த இளைஞருக்கு இதயத்தின் இரத்த நாளங்களில் ஏற்கனவே 70% முதல் 80% வரை ‘சைலண்ட்’ ஆக அடைப்பு இருந்திருக்கலாம். 28 வயது என்பதால் அவருக்கு எந்த அறிகுறியும் தெரிந்திருக்காது. இந்த நிலையில், கனமான உணவு கொடுத்த கூடுதல் அழுத்தத்தால் அந்த அடைப்பு முழுமையாகி மாரடைப்பு (Myocardial Infarction) ஏற்பட்டிருக்கலாம்.

3. பொதுமக்கள் ஏன் இதைசளி மரணம்என்று தவறாக நினைக்கிறார்கள்?

தடய மருத்துவக் கண்ணோட்டத்தின்படி (Forensic Pathology), திடீர் மாரடைப்பு அல்லது சடுதியான  இதயச் செயலிழப்பு (Acute Heart Failure) ஏற்படும் போது, இதயத்தின் இடது இதய  அறை (Left Ventricle) தனது பம்பிங் திறனை உடனடியாக இழக்கிறது; இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தைச் செலுத்த முடியாமல் போவதால், நுரையீரலில் இருந்து இதயத்திற்கு வரவேண்டிய இரத்தம் முன்னோக்கிச் செல்ல முடியாமல் பின்னோக்கித் தேங்கி, அங்குள்ள நுண் இரத்த நாளங்களில் (Pulmonary Capillaries) அழுத்தம் மிகக் கடுமையாக உயர்கிறது. இந்த அதீத அழுத்தத்தின் காரணமாக, இரத்த நாளங்களின் சுவர்களைத் தாண்டி அதிலிருக்கும் திரவப் பகுதியும் (Plasma) சில இரத்தச் சிவப்பணுக்களும் நுரையீரலின் காற்றுப் பைகளுக்குள் (Alveoli) கசிந்து தேங்கத் தொடங்குகின்றன, இதையே மருத்துவ உலகத்தில் “நுரையீரல் வீக்கம்” (Pulmonary Edema) என்று அழைக்கிறோம்.

மரணத்தின் இறுதி நிமிடங்களில் அந்த நபர் உயிர் பிழைக்க வேண்டி தீவிரமாக சுவாசிக்கப் போராடும் போது, காற்றுப் பைகளுக்குள் கசிந்த இந்தத் திரவம், அங்கு எஞ்சியிருக்கும் காற்று மற்றும் உடலின் இயற்கையான புரதங்களுடன் (Proteins) அதிவேகமாகக் கலந்து, சோப்பு நீர் போல வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு (Pinkish) நிற நுரையாக (Froth) மாறுகிறது; இந்த நுரையானது மூச்சுக்குழாய் (Trachea) வழியாக மேலேறி, மரணத்திற்கு முன்னரோ அல்லது மரணித்த உடனேயோ வாய் மற்றும் மூக்கு துவாரங்களின் வழியே வெளியே கசிகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அறிவியல் பின்னணியை அறியாத பொதுமக்கள், வெளியேறும் இந்த திரவ அமைப்பைக் கண்டு “நெஞ்சுச் சளி முற்றி, மூச்சை அடைத்து இறந்துவிட்டார்” என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்; ஆனால், பிரேதப் பரிசோதனையின் (Autopsy) போது தடயவியல் மருத்துவர்கள் அந்த நபரின் சுவாசப் பாதையில் எந்தவிதமான சளித் தொற்றோ (Infection) அல்லது அடைப்போ இல்லை என்பதையும், மாறாக நுரையீரல்கள் சாதாரண எடையை விட இரு மடங்கு கனமடைந்து, தண்ணீரில் நனைத்த பஞ்சு போல நீர் கோர்த்து இருப்பதையும், இதயத் தமனிகளில் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்து, இது சளியால் வந்த மரணம் அல்ல, இதயச் செயலிழப்பால் ஏற்பட்ட நுரையீரல் வீக்கமே (Pulmonary Edema) காரணம் என்பதைத் துல்லியமாக உறுதி செய்கிறார்கள்.

4. 28 வயதில் மாரடைப்பா? சாத்தியமா?

“அவனுக்கு வயசு வெறும் 28 தான், எப்படி ஹார்ட் அட்டாக் வரும்?” என்பது பலரின் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்புக்கு வயது ஒரு தடையே இல்லை.

  • அளவுக்கு மிஞ்சிய மனஅழுத்தம் (Stress)
  • உடற்பயிற்சியற்ற வாழ்வியல் முறை (Sedentary Lifestyle)
  • உடனடி துரித உணவுகள் மற்றும் அதிகப்படியான சிகரெட்/மது பழக்கம்
  • மரபணு காரணங்கள் (Genetics)

போன்றவற்றால் 20, 30களிலேயே இதய நாளங்களில் கொழுப்பு படிந்து (Atherosclerosis) விடுகிறது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு வழிகாட்டுதல்கள்:

  • இரவு நேர உணவில் கட்டுப்பாடு: இரவு நேரங்களில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பதே சிறந்தது. மட்டன், பிரியாணி போன்ற கனமான உணவுகளை மதிய உணவாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. இரவில் சாப்பிட நேர்ந்தால் மிகக் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.
  • சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லாதீர்கள்: கனமான உணவு சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் செல்வது இதயத்திற்கும், செரிமானத்திற்கும் பெரும் அழுத்தத்தைத்தரும். குறைந்தது 2 மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும்.
  • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்: அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் என்று நினைக்கும் பல அசௌகரியங்கள் சில நேரங்களில் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இடது கை, தாடை அல்லது முதுகில் பரவும் வலி, காரணமில்லாத வியர்வை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • முறையான பரிசோதனை: அமெரிக்க இதயக் கழகம் (AHA – American Heart Association) மற்றும் அமெரிக்க இருதயவியல் கல்லூரி (ACC) ஆகியவை 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களும் தங்களின் இதய நோய் ஆபத்தைக் கண்டறிய 4 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிப்படை கொழுப்புப் பரிசோதனை (Lipid Profile) செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இளவயதிலேயே கொழுப்பு படிதல் (Atherosclerosis) தொடங்குவதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க இது உதவுகிறது.

வதந்திகளை நம்பி, மாரடைப்புக்கான உண்மையான காரணங்களை நாம் மூடி மறைக்கக் கூடாது. இந்த இளைஞரின் மரணம் ஆட்டுக்கறியால் வந்த “சளி” அல்ல; அது நவீன வாழ்வியல் முறை நமக்குள் விதைத்திருக்கும் “மாரடைப்பு”. விழிப்புணர்வுடன் இருப்போம், உயிரைக் காப்போம்!

” உணர்ச்சியை விட அறிவியலைக் கேட்க வேண்டிய நேரம்!”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.