கடந்தவாரம் தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார். அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்காலை பேருந்து நிலையத்திற்கு வந்த நடத்துனர், திடீரென தரையில் விழுந்து கடுமையான வெறித்தனமாக துடித்துள்ளார். இதனால், அங்கிருந்தவர்கள் அவரது கை, கால்களைக் கட்டி, ஆம்புலன்ஸ் மூலம் தங்காலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையைத் மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய, தங்காலை ஆதார மருத்துவமனையில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றுக்குள் (இரைப்பையில்) ‘ஐஸ்’ போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும், தலா 20 கிராம் எடையைக் கொண்ட 2 பாக்கெட்டுகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்ததன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இப்பதிவு இவ்வாறு உடலினுள் போதை மருந்து கடத்துவதினால் மற்றும் பொலிசாரினை கண்டவுடன் போதைப்பொருளினை விழுங்குவதினால் ஏற்படும் உடல் பாதிப்புக்கள் மற்றும் மரணம் ஏற்படும் வழிமுறைகள் பற்றி விளக்குகின்றது
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான முறைகளில் ஒன்று உடலினுள் போதைப்பொருட்களை மறைத்து எடுத்துச் செல்வதாகும். இவ்வாறு செயல்படுபவர்கள் “Body Packers” என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் போதைப்பொருள் நிரப்பப்பட்ட சிறிய பொதிகளை விழுங்கியோ அல்லது உடலின் இயற்கை துவாரங்களுக்குள் மறைத்தோ எடுத்துச் செல்கின்றனர். இந்தச் செயல் சட்டரீதியாக குற்றமாக மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசரநிலைகளையும் ஏற்படுத்தக்கூடியது. பல சந்தர்ப்பங்களில் இது திடீர் மரணத்திற்குக் கூட வழிவகுக்கிறது.
Body Packing என்றால் என்ன?
ஹெரோயின், கொக்கெய்ன், மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருட்கள் சிறிய பொதிகளாக இறுக்கமாக சுற்றப்பட்டு விழுங்கப்படுகின்றன அல்லது உடலின் உள்ளகப் பகுதிகளில் மறைக்கப்படுகின்றன. சிலர் ஒரே நேரத்தில் பல பொதிகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர்.பொதிகள் பாதுகாப்பாக சுற்றப்பட்டிருந்தாலும், அவை உடலுக்குள் கசிவதோ அல்லது வெடிப்பதோ ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகள் மிகவும் ஆபத்தானவை.
Body Packers மற்றும் Body Stuffers ஆகிய இரு வேறுபட்ட போதைப்பொருள் கடத்தல் முறைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
1. Body Packers – திட்டமிட்ட கடத்தல்காரர்கள்
- நோக்கம்: இவர்கள் திட்டமிட்டு, சர்வதேச எல்லைகளைத் தாண்டி போதைப்பொருட்களைக் கடத்தும் தொழில்முறை கடத்தல்காரர்கள் (Mules) ஆவர்.
- அளவு: உடலுக்குள் அதிக அளவிலான (நூற்றுக்கணக்கான கிராம் வரை) போதைப்பொருட்களை விழுங்கியிருப்பார்கள்.
- பேக்கிங் தரம்: வயிற்று அமிலம் மற்றும் செரிமானத் திரவங்களால் பாதிப்படையாதவாறு லேடெக்ஸ் (Latex), மெழுகு (Wax) அல்லது தடிமனான பிளாஸ்டிக் உறைகளால் மிகவும் பாதுகாப்பாக, இயந்திரங்கள் மூலம் பேக் செய்யப்பட்டிருக்கும்.
- உயிருக்கு ஆபத்து: இவற்றின் பேக்கிங் தரம் நன்றாக இருப்பதால் உடனே வெடிக்கும் அபாயம் குறைவு. ஆனால், ஏதேனும் ஒரு பாக்கெட் உடைந்தால், அது உடனே மரணத்தை விளைவிக்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
2. Body Stuffers – அவசரக்கால கடத்தல்காரர்கள்
- நோக்கம்: இவர்கள் தொழில்முறை கடத்தல்காரர்கள் அல்ல. போலீசாரிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தில், திடீரென அவசரமாக கையில் இருக்கும் போதைப்பொருளை விழுங்குபவர்கள்.
- அளவு: மிகக் குறைந்த அளவு அல்லது ஒரு சில பாக்கெட்டுகளை மட்டுமே விழுங்குவார்கள்.
- பேக்கிங் தரம்: அவசரத்தில் விழுங்குவதால், சாதாரண பிளாஸ்டிக் கவர், காகிதம் அல்லது எந்தவித பேக்கிங்கும் இல்லாமலேயே விழுங்கிவிடுவார்கள்.
- உயிருக்கு ஆபத்து: சாதாரண பேக்கிங் என்பதால், வயிற்று அமிலத்தால் அது மிக விரைவாகக் கிழிந்து, போதைப்பொருள் உடலில் கலந்து உடனடி மரணத்தை அல்லது கடுமையான நச்சுத்தன்மையை (Toxicity) ஏற்படுத்தும் அபாயம் மிக அதிகம்.
திடீர் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது?
போதைப்பொருள் பொதி உடலுக்குள் வெடித்தாலோ கசிந்தாலோ, அதிலுள்ள போதைப்பொருள் ஒரே நேரத்தில் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படுகிறது. அதன் விளைவாக,
- திடீர் மயக்கம்
- வலிப்பு (Fits)
- சுவாசக்குறைபாடு
- இதயத்துடிப்பு சீர்குலைவு
- இதயநிறுத்தம்
- கோமா நிலை
- திடீர் மரணம்
போன்ற கடுமையான விளைவுகள் சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ ஏற்படலாம்.
பிற உடல்நல அபாயங்கள்
குடல் அடைப்பு
விழுங்கப்பட்ட பொதிகள் குடலுக்குள் சிக்கிக் கொள்ளலாம். இதனால்:
- கடுமையான வயிற்றுவலி
- வாந்தி
- வயிற்று உப்புசம்
- மலம் கழிக்க முடியாமை
போன்ற அறிகுறிகள் தோன்றும். சிகிச்சை தாமதமானால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
குடல் கிழிதல்
பொதிகள் குடல் சுவரை சேதப்படுத்தி கிழிவை ஏற்படுத்தலாம். இதனால் குடலிலுள்ள கிருமிகள் வயிற்றுப் பகுதியில் பரவி கடுமையான தொற்றுநோய் மற்றும் இரத்த நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
நச்சு தாக்கம்
பொதி முழுமையாக வெடிக்காமல் சிறிதளவு கசிந்தாலும் உடலில் நச்சுத்தன்மை உருவாகலாம். இது படிப்படியாக மோசமடைந்து உயிருக்கு ஆபத்தாக மாறலாம்.
அவசர அறுவைச் சிகிச்சை
பல நோயாளிகளுக்கு பொதிகளை அகற்ற அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எச்சரிக்கை அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்:
- காரணமற்ற கடுமையான வயிற்றுவலி
- தொடர்ச்சியான வாந்தி
- மயக்கம் அல்லது குழப்பநிலை
- அதிக தூக்க கலக்கம்
- சுவாசிப்பதில் சிரமம்
- வலிப்பு
- திடீர் சுயநினைவு இழப்பு
பொதுமக்களுக்கான முக்கிய செய்தி
உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் கடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். சில ஆயிரம் ரூபாய்களுக்காக அல்லது பிறரின் தூண்டுதலுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது திடீர் மரணம், நிரந்தர உடல்நல பாதிப்பு, சிறைத்தண்டனை மற்றும் குடும்ப அழிவுக்கு வழிவகுக்கலாம்.
உடலினுள் போதைப்பொருள் மறைத்துக் கடத்துதல் என்பது சட்டவிரோதமானதுடன் மிகவும் ஆபத்தான செயலாகும். பொதி வெடிப்பு, குடல் அடைப்பு, கடுமையான நச்சுத்தன்மை மற்றும் திடீர் மரணம் போன்ற விளைவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வபாயங்களைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும்.
