“சிறுவர்” என்ற சொல் நாம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தும் ஒரு சொல். ஆனால் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, சிறுவர் என்ற சொல்லுக்கு ஒரே ஒரு பொருள் இல்லை. ஒரு நபர் குழந்தையா அல்லது பெரியவரா என்பதை தீர்மானிப்பது அவர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார் என்பதையே சார்ந்துள்ளது. கல்வி, மருத்துவம், பாலியல் உறவு, திருமணம், வேலைவாய்ப்பு, குற்றவியல் பொறுப்பு, வாக்களிக்கும் உரிமை, சொத்து உரிமை போன்ற ஒவ்வொரு சட்டத் துறையிலும் சிறுவரின் வயது எல்லை வேறுபடலாம். உதாரணமாக, 17 வயது மாணவன் சட்டப்படி இன்னும் சிறுவராக கருதப்படலாம். ஆனால் அதே மாணவன் சில சந்தர்ப்பங்களில் குற்றவியல் பொறுப்புக்கு உட்படுத்தப்படலாம். அதேபோல், 16 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பாலியல் சம்மதம் வழங்கும் சட்டத் தகுதியைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் திருமணம் செய்ய முடியாது. இதனால், ” சிறுவர் ” என்ற சட்டக் கருத்து பல அடுக்குகளைக் கொண்டதாகும்.
தடயவியல் மருத்துவர்களுக்கு இந்த வயது வரம்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் தொழிலாளர் சுரண்டல், சிறுவர் குற்றங்கள், குடும்ப வன்முறை, மருத்துவ சம்மதம், சிறுவர் மரணம் போன்ற வழக்குகளில் வயது தொடர்பான சட்ட அறிவு இல்லாமல் சரியான மருத்துவக் கருத்தை வழங்க இயலாது.
1. சிறுவர் என்றால் யார்?
சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (Convention on the Rights of the Child – CRC) படி, 18 வயதிற்குக் குறைவான அனைவரும் குழந்தைகள். இலங்கையும் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே பெரும்பாலான தேசிய சட்டங்களும் 18 வயதிற்குக் குறைவானவர்களை சிறுவர்களாகவே கருதுகின்றன. ஆனால், இந்த பொதுவான வரையறை அனைத்து சட்டங்களிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சில உரிமைகள் 16 வயதில் கிடைக்கின்றன; சில பொறுப்புகள் 12 வயதிலேயே ஆரம்பமாகின்றன. சில உரிமைகள் 18 வயதில் மட்டுமே கிடைக்கின்றன. சில செயல்களுக்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்.
இதனால், சிறுவர்களின் சட்ட நிலைமை அவர் எந்தச் சட்டத்தின் கீழ் மதிப்பிடப்படுகிறார் என்பதையே சார்ந்துள்ளது.
2. ஏன் வயது வரம்புகள் மாறுபடுகின்றன?
மனிதனின் உடல், மூளை மற்றும் சமூக வளர்ச்சி ஒரே நேரத்தில் நடைபெறுவதில்லை. ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சி, அறிவாற்றல், உணர்ச்சி கட்டுப்பாடு, முடிவெடுக்கும் திறன், சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை வெவ்வேறு காலகட்டங்களில் முழுமை அடைகின்றன. இதன் காரணமாகவே சட்டமும் ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி வயது வரம்புகளை நிர்ணயித்துள்ளது. உதாரணமாக,
- 16 வயதில் பாலியல் உறவு பற்றிய புரிதல் இருக்கலாம்.
- 18 வயதில் அரசியல் முடிவெடுக்க வாக்களிக்கலாம்.
- 21 வயதில் மதுபானம் வாங்குவதற்கு அனுமதிக்கப்படலாம்.
அதாவது, எல்லா உரிமைகளும் ஒரே நாளில் கிடைப்பதில்லை.
3. இலங்கையில் குழந்தையைப் பற்றிய முக்கிய வயது வரம்புகள்
இலங்கைச் சட்டங்களில் பொதுவாகக் காணப்படும் முக்கிய வயது வரம்புகள் பின்வருமாறு:
| விடயம் | சட்ட வயது |
| சிறுவர்களின் பொதுச் சட்ட வரையறை | 18 வயதிற்குக் குறைவு |
| பாலியல் சம்மத வயது | 16 வயது |
| திருமண வயது (பொது சட்டம்) | 18 வயது |
| சிறுவர் தொழிலாளர் குறைந்தபட்ச வயது | 14 வயது |
| வாக்குரிமை | 18 வயது |
| முழுமையான சட்ட வயது (Major) | 18 வயது |
| குற்றவியல் பொறுப்பு | 12 வயது முதல் (12–14 வயதில் மனப்பக்குவம் பரிசீலிக்கப்படும்) |
| மதுபானம் வாங்குதல் | 21 வயது |
| புகையிலை வாங்குதல் | 21 வயது |
இந்த அட்டவணை, “வயது” என்பது சட்டத்தில் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
4. கட்டாயக் கல்வி (Compulsory Education) பெற வேண்டிய வயது
இலங்கையில் தற்போது 5 வயது முதல் 16 வயது வரை கல்வி பெறுவது கட்டாயமாகும். இது 2015 ஆம் ஆண்டின் “Compulsory Attendance of Children at Schools Regulations No. 1 of 2015” மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016 முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு முன்பு கட்டாயக் கல்வி வயது 5–14 ஆக இருந்தது; பின்னர் அது 5–16 ஆக உயர்த்தப்பட்டது
5. இராணுவ சேவைக்கான வயது வரம்பு
இலங்கையில் இராணுவ சேவை (Military Service) கட்டாயமானதல்ல. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் தன்னார்வ அடிப்படையில் (Voluntary Recruitment) ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு பதவிக்கும் (Officer, Cadet, Soldier, Technical Officer, Volunteer முதலியவை) வயது வரம்பு மாறுபடும். எவ்வாறாயினும் ஆகக்குறைந்த வயது எல்லை 18 வயது ஆகும்
6. இலங்கையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது வரம்பு
இலங்கையில் மிதிவண்டி (Push Bicycle) ஓட்டுவதற்கு சட்டத்தில் குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வண்டி, கார் போன்ற மோட்டார் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும். ஓட்டுநர் பயிற்சியைத் தொடங்குவதற்கும் Learner’s Permit (L Permit) பெறுவதற்கும் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறை (Practical) தேர்வில் வெற்றி பெற்று முழுமையான ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பெறுவதற்கும், பொதுச் சாலையில் தனியாக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கும் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த வயது வரம்புகள் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவதற்குத் தேவையான உடல், மன மற்றும் அறிவுசார் முதிர்ச்சியை அடைந்திருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
7. சிறுவர்களின் சட்ட உரிமைகள்
இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code – CPC) மற்றும் தண்டனைச் சட்டம் (Penal Code) ஆகியவற்றின்படி, 18 வயதிற்குக் கீழ் உள்ள எவரும் ” சிறுவர்” (Child) ஆவர். குற்றம் செய்த ஒரு நபர் 18 வயதிற்குக் கீழ் இருந்தால், அவரை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்காமல் சிறார் நீதிமன்றத்தில் (Juvenile Court) விசாரிக்க வேண்டும். Children and Young Persons Ordinance (No. 48 of 1939) மற்றும் திருத்தங்களின்படி, குழந்தைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்:
• குழந்தை (Child): 14 வயதிற்குக் கீழ் உள்ளவர்
• இளம் வயதினர் (Young Person): 14–18 வயதினர்
• சிறார் (Juvenile): 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் (சட்ட நடைமுறையில்)
சிறார் குற்றவாளிகளை சீர்த்திருத்த பள்ளி (Children’s Home, Remand Home, Approved School) ஆகிய இடங்களில் தான் அனுப்ப முடியும். பெரியவர்கள் சிறையில் அல்ல. ஒரு குழந்தை வயதில் சிறியவராக இருந்தாலும், அவருக்கு பல அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
- உயிர்வாழும் உரிமை.
- கல்வி பெறும் உரிமை.
- பாதுகாப்பாக வாழும் உரிமை.
- உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு.
- பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு.
- பொருளாதார சுரண்டலிலிருந்து பாதுகாப்பு.
- தமது கருத்தை வெளியிடும் உரிமை.
- நீதிமன்றத்தில் நியாயமான விசாரணை பெறும் உரிமை.
- தனியுரிமை.
இந்த உரிமைகள் அனைத்தும் குழந்தையின் சிறந்த நலனையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இலங்கை சட்டத்தில் ”சிறுவர்” என்பதற்கான வயது வரையறை ஒரு சட்டத்திலிருந்து மற்றொரு சட்டத்திற்கு மாறுபடுகிறது. பொதுவாக 18 வயதே அடிப்படை வரம்பாக கருதப்பட்டாலும், கல்வி (14 வயது), திருமணம் (MMDA: 12 வயது, Common: 18 வயது), தொழிலாளர் (14 வயது) ஆகிய துறைகளில் வேறுபட்ட வரம்புகள் உள்ளன. சட்டப்படி வரம்பு வெவ்வேறாக இருந்தாலும், குழந்தையின் நலன் (Best Interest of the Child) என்பதே அனைத்து சட்டங்களிலும் மிக முக்கியமான கொள்கையாகும்
